ஒரு ஆயுதம்கூட வாங்காத காங்கிரஸ்

காங்கிரசின் முன்னாள் பஞ்சாப் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் பா.ஜ.கவில் இணைந்தார். தனது கட்சியையும் பா.ஜ.க’வோடு இணைத்தார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாடு எதிரிகளால் சூழப்பட்டிருந்த வேளையில் ராணுவத்துக்காக ஒரு ஆயுதம் கூட வாங்கப்படவில்லை. ஆயுத பலத்தில் பாரதத்தைவிட சீனா முன்னணியில் இருக்கிறது. இதற்குக் காரணம் காங்கிரஸ் தான். நான் இப்போது காங்கிரஸின் அங்கம் இல்லை என்பதால் இதைச் சொல்லவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது ஏ.கே. அந்தோணி பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த காலகட்டங்களில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு ஒரு ஆயுதம் கூட வாங்கப்படவில்லை என்று நினைக்கவில்லை. இப்போது நம் தேசத்தைப் பாதுகாப்பதற்கு நமக்குத் தேவையான ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டிற்காகவும், நமக்காகவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. இத்தனை வருடங்களாக காங்கிரசுடன் இருந்து பார்த்தோம். இப்போது நாட்டின் நலனைக் காக்கும் கட்சிக்கு செல்ல வேண்டிய நேரம் இது. பஞ்சாப் ஒரு எல்லை மாநிலம், பாகிஸ்தானுடனான நமது உறவுகள் மோசமடைந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன். பஞ்சாபில் முழுமையான குழப்பத்தை உருவாக்க டுரோன்கள் இப்போது எல்லைக்குள் வருகின்றன. சீனாவும் நம்மிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை. நமது மாநிலத்தையும் நாட்டையும் பாதுகாப்பது நமது கடமை” என்று கூறினார்.