காங்கிரஸ் டூல்கிட்

சுற்றுச்சூழல் ஆர்வலர் என கூறிக்கொள்ளும் கிரேட்டா துன்பர்க், பாரத அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து எப்படி போராட வேண்டும், என்னென்ன பேச வேண்டும், எங்கு ஆர்பாட்டங்கள் நடத்த வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுக் கொடுத்த ‘டூல்கிட்’ வெளியானதில் இருந்து இந்த பெயர் பிரபலமானது. அதேபோல சமீபத்தில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ‘டூல்கிட்’ தற்போது பிரபலமாகி வருகிறது. இது இணையத்திலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த ‘டூல்கிட்’டில், சமீபத்தில் தேசமெங்கும் நடைபெற்ற ரம்ஜான் கூட்ட நெரிசலை ‘மகிழ்ச்சியான குடும்பக் கூடுதல்கள்’ என கூற வேண்டும் ஆனால், கும்பமேளாவை ‘கொரோனாவை பரப்பிய சூப்பர் ஸ்பிரெட்டர்’ என திரும்ப திரும்ப சொல்லி முத்திரை குத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை ஒட்டி அனைவரும் விவாதங்களில் பேச வேண்டும், கட்டுரைகள் எழுத வேண்டும், சமூக ஊடக பதிவுகளை இடவேண்டும் என தன் கட்சியினரையும் கூட்டணியினரியும் பணித்திருக்கிறது காங்கிரஸ்.

இதைத்தவிர, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமரின் வீடு, கொரோனா காலத்தில் இது தேவையா என கூறுதல், பிரதம மந்திரியின் பி.எம் கேர்ஸ் நிதி குறித்த அவதூறுகளை கட்டவிழ்த்து விடுவது, கொரோனாவால் இறந்தவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு பாரதத்தை பெரிய சுடுகாடாகக் காட்டுவது, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜந்த் சிங் மற்றும் ஜெய்சங்கர் போன்ற அமைச்சர்கள் மீது ‘காணாமல் போனவர்கள்’, ‘உணர்வற்றவர்கள்’ போன்ற வார்த்தை தாக்குதல்களை நடத்துவது என பல திட்டங்களை இந்த டூல்கிட் மூலம் வகுத்துக் கொடுத்துள்ளது காங்கிரஸ். மேலும், உச்சபட்சமாக, புதிய உரு மாறிய கொரோனா வைரஸை ‘இந்தியன் ஸ்ட்ரெய்ன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் இது பரிந்துரைக்கிறது. தனது கட்சித் தொண்டர்களை இந்த வைரஸை ‘மோடி ஸ்ட்ரெய்ன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தனிமனிதத் தாக்குதல் நடத்தும்படியும் பணித்திருக்கிறது.

கும்பமேளாவில் பங்கு பெற கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம், குறைந்த அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்படியும் கொரோனா தாக்கம் தெரிய ஆரம்பித்ததும் கும்பமேளா உடனடியாக நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் அது கொரோனா பரவ ஆரம்பித்த சூழல்தான். ஆனால், ரம்ஜான் கொண்டாடப்பட்டது கொரோனா உச்சத்தில் உள்ளபோது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நேரம். ஆனால், அவற்றை எல்லாம் சிறிதும் மதிக்காமல், சமூக இடைவெளி, முகக்கவசம் என எந்த அரசு விதிமுறைகளையும் பின்பற்றாமல் முஸ்லிம்கள் ரம்ஜான் கொண்டாடினர். எனவே சூப்பர் ஸ்பிரெட்டர் யார் என்பது உலகிற்கே தெரியும்.

நாடாளுமன்ற கட்டடம், 2012 ஜூலையில் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போதே, அன்றைய சபாநாயகர் மீரா குமார் முன்மொழிந்ததுதான். 94 வருட பழமையான கட்டடம், இடப்பற்றாக்குறை, பாதுகாப்புக் குறைபாடுகள், புதுப்பிக்க இயலாத சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் மோடியால் 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டு உரிய பணமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது கொரோனா பரவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எம் கேர் நிதியில் முறைகேடு எதையும் காங்கிரசால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அதனை குறித்து அடிப்படை ஆதாரமற்ற அவதூறு பரப்ப அவர்களது கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் முன்னதாக பரப்பிய ஆதாரமற்ற ரபேல் ஊழல் குர்றச்சாட்டு முதற்கொண்டு அனைத்துமே நிரூபிக்கப்படாமலேயே உள்ளன. நீதிமன்றமும் அதற்காக ராகுல் உட்பட பல காங்கிரஸ் தலைவர்களை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாரதத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது வேதனை தரும் விஷயம்தான். ஆனால், 32 கோடி மக்கள்தொகைக் கொண்ட அமெரிக்காவில் உயிரிழந்தவர்கள் 5.9 லட்சம். அங்கு புதைக்க இடம் இல்லாமல், மாதக்கணக்கில் உடல்களை பத்திரமாக பிணவறைகளில் வைத்துள்ளனர். ஆனால், 138 கோடி மக்கள்தொகைக்கொண்ட பாரதத்தில் இறந்தவர்கள் 2.75 லட்சம் மட்டுமே. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் உயிரிழப்புகள் குறைவு, மீள்வோர் எண்ணிக்கை மிக அதிகம், தடுப்பூசி செலுத்துவதில் உலகிலேயே அதிவேகமான நாடு, ‘வசுதைவ குடும்பகம்’ என்பதற்கேற்ப உலகையே ஒரு குடும்பமாக நினைத்து மற்ற நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்கும் பரந்த மனப்பான்மை கொண்ட தேசம் என்ற நல்ல பெயர் பெற்ற பாரதத்தை இறந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு சிறுமைப்படுத்தி அதில் குளிர் காய்கிறது காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும். மேலும், காங்கிரசும் அவர்களது கூட்டணியினர் ஆளும் பஞ்சாப், தமிழகம், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில்தான் கொரோனா இறப்புகள் அதிகம், தடுப்புசி செலுத்திக்கொள்வதில் தாமதம் போன்ற அவலங்கள் நடக்கின்றன என்பதை காங்கிரஸ் வசதியாக மறந்துவிட்டது.

கொரோனா சூழல் காரணமாக அனைத்து மத்திய அமைச்சர்களும் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டு உள்ளனர். ஆனால், எந்த வேலையும் இல்லாமல் ஊர் சுற்றுவதால் ராகுலுக்கு, தினம் ஒரு அறிக்கை விட போதிய நேரம் இருக்கிறது. அதனை எழுதித் தரவும் ஆட்கள் உள்ளனர். தேர்தல், நாடாளுமன்றம் நடக்கும் நேரம் என எந்த காலமாக இருந்தாலும், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அடிக்கடி இத்தாலி, தாய்லாந்து என வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா செல்வது ராகுலின் வாடிக்கை. ஆனால், அவர்தான் பிரதமரை காணவில்லை, அமைச்சர்களை காணவில்லை என அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.

டி.என்.ஏ வகை வைரசை போல இல்லாமல் ஆர்.என்.ஏ வகை வைரஸ் என்பதால் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவது அதன் இயல்பு. கொரோனாவின் இரண்டாவது உருமாற்றத்தை ‘இந்தியன் ஸ்ட்ரெய்ன்’ என உலக சுகாதார நிறுவனமே கூறாத நிலையில், அதிமேதாவிகளான காங்கிரசார் அதற்கு ‘இந்தியன் ஸ்ட்ரெய்ன்’, ‘மோடி ஸ்ட்ரெய்ன்’ என பெயர் வைத்திருப்பது, மோடியை இழிவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு வெறுப்பின் உச்சத்தில் காங்கிரசார் நம் தேசத்தையே அவமானப்படுத்துகிறார்கள் என்பதைதான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. முதலில் தேர்தலில் தங்கள் தொடர் தோல்விகளுக்கு உண்மை காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இவர்கள். அதனை விடுத்து, குறை காண்பதையும் பொய் சொல்வதையும் தொடர்ந்தால், காந்தி சொன்ன காங்கிரஸ் இல்லா தேசமாக பாரதம் விரைவில் மாறிவிடும் என்பது நிதர்சனம்.

மதிமுகன்