மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில், பா.ஜ.க தொண்டர்களின் ‘‘விஜய் சங்கல்ப்’’ பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு கால கூட்டணி ஆட்சியின்போது அவர்கள், ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்களில் ஈடுபட்டனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட எங்களது அரசுக்கு எதிராக ஒரு ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். என்றாலும் அவரது ஆட்சியின் கீழ் பாரதம் உலகளவில் 11வது இடத்தில் பின்தங்கியிருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக அவரை பாராட்டினர். தற்போது பிரதமர் மோடி தலைமையின் கீழ் பாரதம் 5வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தேசத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது. மாறாக, பா.ஜ.க ஆட்சியில் தேசத்தின் பொருளாதாரம் தலை நிமிர்கிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று கூச்சலிட்டனர். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு துணிச்சலுடன் அதனை நீக்கியது. இன்று வரை கூழாங்கல்லை எடுத்து வீசக்கூட யாரும் துணியவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது, ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் அதிகமாக இருந்தது. இதனால் காஷ்மீர் நிலையற்றதாக இருந்தது. அங்கு அராஜகம் தலைவிரித்தாடியது. அந்த நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது” என கூறினார்.