காங்கிரஸ் தலைவர் பிரமோத் கிருஷ்ணம் கருத்து

மே 28 அன்று நடைபெறவிருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா குறித்து காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் தேவையற்ற சலசலப்பை உருவாக்கி வருகின்றன. அரசு அவர்களுக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பிதழ்களை வழங்கியதை அடுத்து, காங்கிரஸ், தி.மு.க, திருணமூல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகள் இதில் கலந்துகொள்வதை நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. இந்த முடிவை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் எதிர்த்துள்ளார். இதனால், மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து பேசியுள்ள ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், “புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதற்கு பிரதமர் மிகவும் பொருத்தமானவர். எனினும், எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன. பாரதத்தின் நாடாளுமன்றத்தை பாரதப் பிரதமர் திறந்து வைக்காமல், பாகிஸ்தான் பிரதமர் திறந்து வைப்பாரா என்ன?. மோடியின் கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கலாம். ஆனால் அவரது நிலைப்பாட்டை கேள்வி கேட்கக்கூடாது. ஏனெனில் பிரதமர் என்பவர், முழு நாட்டிற்கும் சொந்தமானவர், அவர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல. மோடியை எதிர்க்க நமக்கு உரிமை உள்ளது ஆனால் நாட்டை எதிர்ப்பது சரியல்ல. எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் டுவிட்டரில் தனது நிலைப்பாஅட்டை விளக்கிய அவர்,  “நாடாளுமன்றம் என்பது பா.ஜ.கவின் வீடு அல்ல, அது நாடு முழுவதுக்குமானது. மோடியை எதிர்ப்பது பரவாயில்லை, ஆனால் நாட்டை’ எதிர்ப்பது சரியல்ல” என்று எழுதியுள்ளார்.