குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் விலகி பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். அவ்வகையில், தற்போது விஷ்வாதர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எல்.எல்.ஏவான ஹர்ஷத் ரிபாதியா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.கவில் இணைந்துள்ளார். குஜராத், காந்தி நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத் பா.ஜ.க பொதுச் செயலாளர் பிரதீப் சிங் வகேலா முன்னிலையில் அவர் பா.ஜ.கவில் இணைந்தார். அவருடன் பல்வேறு உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் பா.ஜ.கவில் இணைந்தனர். பட்டிதார் சமூகத்தை சேர்ந்த ஹர்ஷத் ரிபாதியா, அந்த சமூகத்தினர் பேராதரவுடன் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.