லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடம் ‘21-ம் நூற்றாண்டில் கேட்பதற்காக கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர், பாரதத்தின் ஜனநாயகம் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது என்றும், பெகாஸஸ் செயலி மூலமாக தனது அலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். ராகுலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “வெளிநாட்டு மண்ணில் போய் அழும் தனது வேலையை ராகுல் மீண்டும் ஒருமுறை செய்திருக்கிறார்.அவரது மனதில் தான் பெகாசஸ் இருக்கிறது. ‘மோடியின் தலைமையின் கீழ், உலக நாடுகளின் மத்தியில் பாரதத்தின் மரியாதை அதிகரித்துள்ளது. உலகத் தலைவர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒருவராக மோடி இருக்கிறார். அவர் ஒரு முக்கியமான தலைவராக உள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துகள்’ என்று இத்தாலிய பிரதமர் கூறியிருந்ததை ராகுல் காந்தி காதுகொடுத்து கேட்க வேண்டும். நேற்று வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதையே நமக்குத் தெரிவிக்கின்றன. மக்களின் முடிவுகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்கள் பிரதமர் மோடியை நம்புகிறார்கள். இந்தத் தோல்வியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாநிலமாக அவர்கள் இழந்து வருகிறார்கள். தேசத்தை அவமானப்படுத்துவது என்பது தான் காங்கிரஸின் மனநிலை. ராகுலுக்கு பிரதமர் மோடி மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களிடம் அப்படியானது எதுவும் இல்லை. இது காங்கிரஸின் நோக்கம் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார். பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, “ஒரு நபர்களின் மீதான அவர்களின் வெறுப்பு, நாட்டின் மீதான வெறுப்பாக மாறியுள்ளது” என்று ராகுலை கண்டித்துள்ளார்.