கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சதீஷ் ஜர்கிகோலி, “பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஹிந்து மற்றும் ஹிந்துத்துவா என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் ஹிந்து என்ற சொல் பார்சியன் மொழியை சேர்ந்தது. அந்த சொல் ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்தது. ஹிந்து சொல்லுக்கும், இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?. ஹிந்து என்ற சொல்லின் அர்த்தம் மோசமானது. அந்த சொல் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள இணையத்திற்கு சென்றால் தெரிந்து கொள்ளலாம் என்று பேசினார். சதீஸ் ஜார்கிகோளியின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்தை பா.ஜ.க கடுமையாக கண்டித்துள்ளது. ஆச்சரியப்படும் விதத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடமும் இதனை கண்டித்துள்ளது. குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தற்போது நடைபெரும் தேர்தல், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல், பெரிய ஓட்டை விழுந்த ஓட்டு வங்கி, ஆளுமையற்ற தலைமை, ஒரு குடும்ப ஆதிக்கம், ஹிந்துக்கள் மீதான ஆண்டாண்டு கால புறக்கணிப்பு ஆகியவற்றால் மக்கள் காங்கிரஸ் கட்சி மீது வெறுப்படைந்துள்ளதால் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.