காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, குஜராத் 70 சதவீத உப்பை நாட்டிற்காக உற்பத்தி செய்கிறது என்றும், அந்த வகையில் நாட்டு மக்கள் பெரும்பாலும் குஜராத் உப்பைத்தான் உண்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவரின் பேச்சை, காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் உதித் ராஜ் கடுமையாக விமர்சித்தார். மேலும் திரௌபதி முர்முவைப் போன்ற ஒருவர் எந்த நாட்டிற்கும் குடியரசுத் தலைவராக ஆகக் கூடாது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். உதித் ராஜின் கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்தது. பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, காங்கிரஸ் கட்சியினர் இதுபோன்று பேசுவது இது முதல்முறை அல்ல என்றும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரௌபதி முர்முவை ராஷ்ட்ர பத்னி என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கி அதன் பின்னர் மன்னிப்பு கோரியதையும் சுட்டிக்காட்டினார். சம்பித் பத்ராவுக்கு பதில் அளித்த உதித் ராஜ், ஆதிவாசிகளை பட்டியலினத்தவர்கள் விமர்சிப்பார்கள், அவர்களுக்காக போராடவும் செய்வார்கள். அந்தவகையில் திரௌபதி முர்முவை விமர்சிக்க தனக்கு உரிமை உண்டு என்று தெரிவித்தார். இந்த சூழலில், உதித் ராஜின் கருத்துக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘நாட்டின் உயரிய பதவியை வகிக்கும் ஒருவரை, தனது கடின உழைப்பால் உயர்ந்த ஒரு பெண்மணியை தகாத வார்த்தையால் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. அவமதிக்கும் வகையிலான தனது பேச்சுக்காக உதித் ராஜ் மன்னிப்பு கோர வேண்டும். இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.