ராமாயணத்தை திரித்த காங்கிரஸ் தலைவர்

காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) தலைவர் கே.சுதாகரன் பகவான் ஸ்ரீராமர், ஸ்ரீ லக்ஷ்மணன் மற்றும் சீதா தேவியை வெளிப்படையாக அவமதித்துள்ள விவகாரம் கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைமைக்கு போட்டியிடும் சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே குறித்து பேசினார். அப்போது தென் கேரளா மற்றும் வட கேரளா அரசியல்வாதிகள் எவ்வளவு வித்தியாசமானவர்கள் என்பதற்கு உதாரணம் கூறிய சுதாகரன், “ஆம், வரலாற்று வேறுபாடுகள் உள்ளன. நான் ஒரு கதையைப் பகிர்ந்து கொள்கிறேன். ராவணனை கொன்றபிறகு ராமர், சீதை, லக்ஷ்மணன் மூவரும் புஷ்பக விமானத்தில் இலங்கையிலிருந்து திரும்பினார். விமானம் கேரளாவின் தென்பகுதியில் நுழைந்ததும், லட்சுமணன் தன் சகோதரர் ராமரை கடலில் தள்ளிவிட்டு சீதையுடன் அயோத்திக்கு தப்பிக்க நினைத்தான். ஆனால் அதன் பின்விளைவுகளை பற்றி லக்ஷ்மணன் நினைத்துக்கொண்டிருந்தபோது, ​​அவர்கள் திருச்சூரை அடைந்துவிட்டார்கள். அப்போது லக்ஷ்மணன் மனம் மாறி குற்ற உணர்ச்சியுடன் ஒரு மூலையில் அமர்ந்துவிட்டார். ராமர் அவரது தோள்பட்டையில் தட்டினார். “ஆம், நான் உனது மனதைப் படித்தேன். அது உன் தவறல்ல. நாம் கடந்துவந்த நிலத்தில்தான் அந்த தவறு இருக்கிறது என்று கூறி தேற்றினார்” என ராமாயணத்தில் இல்லாத ஒரு வெறுக்கத்தக்க புனைவு நிகழ்ச்சியை கூறினார் சுதாகரன். மேலும், வட கேரளாவை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள், ஆனால் தென் கேரளாவில் அப்படி இல்லை என கூறினார். இதன் மூலம், கேரள மக்களுடன் சேர்த்து ராமாயணத்தையும் ஹிந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமர், சீதை, லக்ஷ்மணரையும் மிகவும் தவறாக, மோசமாக சித்தரித்துள்ளார். “அவரது அறிக்கை அவமதிக்கும் செயலாகும். இனி அவர் வகிக்கும் பதவியில் நீடிக்க தகுதியில்லை. அவரை கேபிசிசி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்க வேண்டும்” என்று கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறியுள்ளார்.