கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகாவில் பெரும்பான்மையான சமூகமாக விளங்குவது ஒக்கலிகா கவுடாக்கள். ஆகவே, அச்சமூகத்தின் ஓட்டு வங்கியை கைப்பற்றும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த டி.கே. சிவக்குமார். எனவே, அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அந்த சமூகத்தினரின் ஓட்டுக்களை கைப்பற்ற தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். இந்நிலையில்தான், ஒக்கலிகா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், சிவகுமார் திறந்த பேருந்தில் பிரசார யாத்திரை சென்றார். அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அவர் வீசியெறிந்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது. சிவக்குமாரின் இந்த செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆணையமும் இந்த நடவடிக்கையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.தேர்தலில் வாக்குகளுக்கு பணம் அளிப்பது தவறு என்பது ஒருபுறமிருக்க, தனது சமூக மக்களையே, பணம் வீசியெறிந்து அதனை பொறுக்கிக்கொள்ளும் வகையில் இழிவுபடுத்திய சிவக்குமாரின் செயலை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.