காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் முன்னிலையில் அவர் பா.ஜ.கவில் இணைந்தார். முன்னதாக, மன்பிரீத் பாதல் தனது ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், “கட்சியிலும் ஆட்சியிலும் நான் வகித்த ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு அவுன்ஸ் ஆற்றலை அர்ப்பணித்தேன். இந்த வாய்ப்புகளை எனக்கு வழங்கியதற்கும், கடந்த காலத்தில் நீங்கள் எனக்கு காட்டிய கருணை, மரியாதைக்கு நன்றி. வருந்தத்தக்க வகையில், கட்சிக்குள் நிலவும் கலாச்சாரம் மற்றும் தற்போதைய போக்கில் உள்ள எதிர்மறையான ஆசைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இனி காங்கிரஸின் ஒரு பகுதியாக இருக்க நான் விரும்பவில்லை, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப் மக்களுக்கும் அதன் நலன்களுக்கும் என்னால் இயன்றவரை சேவை செய்ய என்னை அனுமதிக்கும் நம்பிக்கையில், ‘பஞ்சாப் மக்கள் கட்சி’யை உங்கள் கட்சியுடன் இணைத்தேன். மிகுந்த நம்பிக்கையுடனும், ஒரு அமைப்பில் ஒருங்கிணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடனும் செய்தேன். ஆனால், இந்த ஆரம்ப உற்சாகம் படிப்படியாக ஏமாற்றத்திற்கு வழிவகுத்தது” என்று கூறியுள்ளார்.