கர்நாடகாவில் பட்டியலின ஹிந்து ஒருவரை வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்திற்கு மாற்றிய வழக்கில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெங்களூரு முன்னாள் கார்ப்பரேட்டர் அன்சர் பாஷா, அவரது சகோதரர் நயாஸ் பாஷா, ஹாஜி சாப், அதார் ரஹ்மான் மற்றும் ஷோயிப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்சர் பாஷா, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது. இவர்கள், கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான ஸ்ரீதர்கங்காதர் என்பவரை, பணம் கொடுத்து ஏமாற்றி முஸ்லிம் மதத்துக்கு மாற்றி, அவருக்கு வலுக்கட்டாயமாக சுன்னத் செய்து, மாட்டிறைச்சியை உண்ணவைத்தனர். அறை ஒன்றில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தினர். முகமது சல்மான் என பெயர் மாற்றம் செய்து அவரது கைகளில் துப்பாக்கிக் கொடுத்து புகைப்படம் எடுத்தனர். வருடம்தோறும் 3 ஹிந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும், இல்லையென்றால் இந்த புகைப்படத்தை வைத்து போலி வழக்கில் சிக்க வைப்போம் என மிரட்டினர். ஸ்ரீதர், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசிப்பதால் முதலில் புகார் கொடுக்க பயந்தார். பின்னர் அவர் பஜ்ரங் தளத்தின் உதவியுடன் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரில் இதில் ஈடுபட்ட 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர்கள், ‘நவா முஸ்லிம்கள்’ என்ற குழுவை உருவாக்கி, புதிதாக சிலரை மதம் மாற்றி அவர்களை, ஈரான் ஈராக்கில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களிடமிருந்து நிதியை பெற்று வந்தனர். பாரதத்தை ஒரு முஸ்லிம் நாடாக மாற்றும் கொள்கையுடன் செயல்பட்டனர் என ஃபர்ஸ்ட் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.