கர்நாடகாவின் முத்பித்ரி நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்கு தேச விரோத சக்திகளின் உதவியை அக்கட்சி பெறுகிறது. இதற்காக, தேச விரோத சக்திகள் மீது உள்ள வழக்குகளை திரும்ப பெறுகிறது. பயங்கரவாத ஆதரவாளர்களை அக்கட்சியினர் பாதுகாக்கின்றனர். கர்நாடகாவில் பயங்கரவாத செயல்களை பரப்ப சதி திட்டம் தீட்டியதில் கைது செய்யப்பட்ட நபர்களை கூட மீட்பதற்கு காங்கிரஸ் முன்வருகிறது. இந்த ரிவர்ஸ் கியர் கட்சியானது, தேச விரோத சக்திகள் மீது உள்ள வழக்குகளை திரும்ப பெறுவதுடன் அவர்களை விடுவிக்கவும் செய்கிறது. ஒட்டு மொத்த நாடும் நம்முடைய ராணுவ வீரர்களை மதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி நமது வீரர்களை தொடர்ந்து புண்படுத்துகிறது. பாரதத்தின் வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் மதிப்பளிக்கிறது. ஆனால், இந்த ரிவர்ஸ் கியர் கட்சி, உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு, அந்நிய மண்ணில் நமது நாட்டையே அவதூறு செய்து பேசி வருகிறது. ராஜஸ்தானில் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய குற்றவாளியை அக்கட்சி பாதுகாத்ததுடன் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்துள்ளது. கர்நாடகாவில் இத்தகைய காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு வர நீங்கள் விடுவீர்களா? உங்களது மாநிலம் அழிந்து போக நீங்கள் விடுவீர்களா?” என்று பேசினார்.