பதற்றத்தில் காங்கிரஸ்

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகரித்து வரும் வரவேற்பு எங்கே தனது கொஞ்சம் நஞ்சமிருக்கும் வாக்கு வங்கியையும் பாழாக்கிவிடுமோ, காஷ்மீர் விவகாரத்தில் தங்களது குட்டு வெளிப்பட்டு விடுமோ என காங்கிரஸ் கட்சி பதற்றம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. காங்கிரஸ் தனது சமூக ஊடகங்களில் பரப்பி வரும் பொய்யான செய்திகளே இதற்கு சாட்சி. உதாரணமாக, 1990 முதல் 2007 வரையிலான 17 வருட காலக்கட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 399 காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால், அதே காலகட்டத்தில் 15,000 முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என கூறி தங்களது பாவத்திற்கு முஸ்லிம் பயங்கரவாதிகளை பலிகடாவாக்கியுள்ளது. மற்றொரு பதிவில், 1990ல் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஜக்மோகன் காலத்தில்தான் இந்த வெகுஜன வெளியேற்றம் நடைபெற்றது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால், உண்மையில், ஜக்மோகன் பல காஷ்மீரி ஹிந்துக்களை அவர்களின் மோசமான விதியிலிருந்து காப்பாற்றினார் என்பதுதான் உண்மை. மற்றொரு பதிவில், காங்கிரஸ் கட்சி காஷ்மீர் கலவரத்திற்கு பா.ஜக.வை குற்றம் சாட்டியது. ‘அயோத்தியில் ராமர் கோயில் பிரச்சினையை பா.ஜ.க  கைகளில் எடுத்து ஒரு போலி பதற்றத்தை ஏற்படுத்தியது இது காஷ்மீர் பண்டிட்களின் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துவிட்டது’ என கூறியது. இப்படி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரத்தை திசைத்திருப்ப இதுபோல பல பொய்களை காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. ஆனால், உண்மை என்னவென்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.