காஷ்மீரின், பூஞ்ச் நகரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், ‘2019ல் நீக்கப்பட்ட சட்டப்பிரிவான, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது பிரிவை மீட்டெடுப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மக்களை மகிழ்விப்பதற்காக நம் கையில் இல்லாததை நான் பேசமாட்டேன். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்ற முடியும். ஆனால், அதற்கு 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும். ஆனால் 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில்கூட காங்கிரஸ் இந்த எண்ணிக்கையை பெற முடியாது. காங்கிரஸ் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சிக்கிக்கொண்டுள்ளது. அதைத் தாண்டி அக்கருத்துக்கள் வெளிவருவதில்லை’ என தெரிவித்தார். சமீபகாலமாக காங்கிரஸ் செயல்பாடுகளில் அதிருப்தியாக உள்ளார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைமையில் பெரிய மாற்றங்கள் செய்யக்கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ஜி 23 என்ற அதிருப்தி காங்கிரஸ் தலைவர்களின் குழுவில் முக்கிய அங்கமாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.