பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை, பி.பி.எல்.ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை என பல வாக்குறுதிகளை அள்ளிவிட்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.ஆட்சி பொறுப்பேற்று ஒரு வார காலம் ஆன நிலையிலும் வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.இதனால் அங்கு பலர் மின் கட்டணம் செலுத்த மாட்டோம் எனவும், இலவசமாக தான் பேருந்துகளில் பயணிப்போம் எனவும் பலர் அரசு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.மின்கட்டணம் வசூலிக்க வந்த மின் ஊழியரை, வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அண்மையில் நடைபெற்றது.
இந்நிலையில் கொப்பல் மாவட்டம் கங்காவதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது.அதி பயணித்த தொழிலாளி ஒருவர், நடத்துனரிடம் தனக்கு மட்டும் டிக்கெட் எடுத்தார்.தனது மனைவிக்கு டிக்கெட் எடுக்கவில்லை. இதுகுறித்து நடத்துனர் அந்த தொழிலாளியிடம் கேட்டபோது, காங்கிரஸ் தனது வாக்குறுதியில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என கூறியதால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனை பேருந்தில் இருந்த மற்றொரு பயணி, தனது அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
காங்கிரஸ் அறிவித்த 5 இலவச திட்டங்களுக்கும் ஆகும் செலவு குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரசிடம் அறிக்கை வழங்கஉத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின்சார துறைக்கு ஆகும் செலவு குறித்து அரசிடம் மின்வாரிய அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், வீடுகளுக்கு மாதம் தோறும் தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க மாதம் தோறும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி தேவை, ஒரு ஆண்டுக்கு ரூ.23 ஆயிரத்து 400 கோடி தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அந்த தொகையை முன்கூட்டியே மின்வாரிய நிறுவனங்களுக்கு ஒதுக்க வேண்டும்.அப்போது தான் மின் வாரியங்கள் தங்கள் பணியை எந்த சிரமமும் இன்றி மேற்கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.