தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோயில்கள் கட்டுவதை சுற்றியே தெலுங்கானா அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. கொண்டகட்டு ஹனுமான் கோவிலின் மறுசீரமைப்பு பணிகளை முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் 100 ஸ்ரீராமர் கோவில்கள் கட்டப்படும் என உறுதியளித்துள்ளார். வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர், தேர்தல் சமயத்தில் ஹிந்துக்களின் வாக்குகளை கவர, மாபெரும் யாகங்கள் நடத்துதல், கோயில்கள் மறுசீரமைப்பு போன்ற தெளிவான ஹிந்து வாக்குவங்கி நடைமுறைகளுக்கு பெயர் பெற்றவர். இதனால் அவர், கொண்டகட்டு ஹனுமான் கோயிலை மேம்படுத்தும் அவரது புதிய முயற்சி யாருக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால், 100 ராமர் கோயில்கள் கட்டப்படும் என அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி, ‘ஹாத் சே ஹாத் ஜோடோ’ யாத்திரையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரபல கோயில் நகரமான பத்ராசலத்தில் நடந்த நடைபயணத்தின் போது அவர், தனது கட்சி 1,000 கோடி ரூபாயில் ஸ்ரீராமருக்கு 100 கோயில்களை கட்டும். அதாவது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா ரூ.10 கோடி செலவில் ஒரு ராமர் கோவில் கட்டப்படும் என்று அறிவித்தார். இந்த கோயில்கள், ஸ்ரீராமர் காட்டிய சன்மார்க்க பாதையில் நடக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றார். காங்கிரஸ் ஒருவேளை வெற்றி பெற்றாலும்கூட, தனது வாக்குறுதியை ஏதாவது சாக்கு சொல்லி காற்றில் பறக்கவிட்டு விடும். இது அக்கட்சியின் வழக்கம் தான். பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் திடீரென ஹிந்துக்கள் மீது கரிசனம் காட்டுவதாக நடித்து வருகிறது என பொதுமக்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், இதே வாக்குறுதியை ராகுல் அல்லது சோனியா மேடையில் வெளிப்படையாக அறிவிப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.