மேகாலயாவில் கரையும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் மேகாலயா பகுதியின் முன்னாள் அமைச்சரும் முக்கிய தலைவருமான அம்பாரீன் லிங்தோ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அடுத்த ஆண்டு முன் பாதியிலேயே மேகாலயா சட்டப்பேரவைக்கு தேர்தல் வரவிருக்கும் நிலையில் அம்பாரீன் லிங்தோ கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். தனது டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் “நான் என் வாழ்நாளின் பெரும்பகுதியை காங்கிரஸ் தொண்டனாக கழித்துள்ளேன். ஆனால் சமீப காலமாக கட்சியில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கையில் கட்சி தனது இலக்கினை இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இதற்காக கட்சியும் அதன் தலைமையும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய கட்டத்தில் உள்ளன. ஆனால் அதில் கட்சி தோற்றுவிட்டது. அதனால் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல மேற்கு ஷில்லாங் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான மொஹேந்திர ராப்சங் என்பவரும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர். இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் இன்னும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். ஆனால் நான் இடைநீக்கத்தில் உள்ளதால் இனி காங்கிரஸிலிருந்து போட்டியிட மாட்டேன். இன்னும் 10 நாட்களில் நான் காங்கிரஸில் இருந்தும், எம்எல்ஏ பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டு என்.பி.பியில் இணைவேன். என்னையும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏ.க்களையும் காங்கிரஸ் கட்சி நடத்திய விதம் என்னை வேதனைப்படுத்தியது” என்று கூறினார். மேகாலயாவில் கடந்த மாதம் ஆளும் என்.பி.பி கட்சியிலிருந்து 2 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் ராஜினாமா செய்தனர். இந்த மூவரும் பா.ஜக.வில் இணைய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.