கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள அமைப்பை தடை செய்வோம் என தெரிவித்தது நாடெங்கும் பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிராக வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தாக்கம் காங்கிரசின் வாக்கு வங்கிக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு பெரிதானது. இதனால், காங்கிரஸ் கட்சி தற்போது பின்வாங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வரான வீரப்ப மொய்லி உடுப்பி நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் எதுவும் கட்சியிடம் இல்லை. மாநில அரசுகளுக்கு அதுபோன்ற அமைப்புகளை தடை செய்யும் உரிமையும் இல்லை. காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பஜ்ரங் தள அமைப்பை தடை செய்வோம் என கூறவில்லை” என்று கூறினார்.