காங்கிரஸ் தி.மு.க கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், புதுச்சேரியில் காங்கிரஸ் 15 இடங்களிலும், தி.மு.க 13, வி.சி.க 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 என அங்கு போட்டியிட முடிவாகியுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்துள்ள புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள், அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், கடந்த தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 15ல் வெற்றி பெற்றது காங்கிரஸ். ஆனால், தி.மு.க 9 இடங்களில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 30 தொகுதியிலும் நிர்வாகிகள் உள்ளனர்.
ஆனால், தி.மு.கவில் போட்டியிடக்கூட ஆட்களே இல்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க..விற்கு வேலை செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பினர். இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிக் கையெழுத்திட்டு கட்சியின் மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதுவையில் தொகுதி ஒதுக்கப்படாததால், அக்கட்சியும் மன வருத்தத்தில் உள்ளது. உடனடியாக தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லையெனில் 4 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக மார்க்ஸிஸ்ட் கட்சியும் தெரிவித்துள்ளது.