உலக அமைப்பின் ஜெனிவா தலைமையகத்தில் நடைபெற்ற உலக சுகாதார சபையின் 75வது அமர்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘பாரதத்தில் கொரோனா இறப்பை அதிகப்படுத்தி உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டதற்கு பாரதம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. பாரதத்தில் சமீபத்தில் 45 லட்சம் பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து இருக்கலாம் என அறிக்கை வெளியிட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் பாரதத்தில் உள்ள 23 மாநில சுகாதார அமைச்சர்கள் ஒன்றுகூடி உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிரைவேற்றினர். மத்திய அரசு சட்டப்படி, உருவாகிய வலுவான மற்றும் துல்லியமான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தனியார் அமைப்புகளின் துல்லியமற்ற தகவல்களை உலக சுகாதார அமைப்பு நம்பக்கூடாது’ என்று தெரிவித்தார். மேலும், ‘உலக அலவிலான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கு சமமான அணுகலைச் செயல்படுத்த, நெகிழ்வுத்தன்மை மிக்க உலகளாவிய விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், “உலகளாவிய சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக இந்த முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்க பாரதம் தயாராக உள்ளது’ என்றார்.