முதல்வருக்கு கண்டனம்

பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசிய விஷயங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். ‘இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், பெருமை வாய்ந்த தமிழனாக முதல்வரின் பேச்சு என்னை வெட்கம் அடைய வைக்கிறது. தமிழ்நாடு முதல்வர் அரசியல் செய்துள்ளார். தமிழக முதலமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன். இது நாகரீகம் அற்ற செயல். எங்கள் முதல்வர் கருணை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இல்லை. அவர் பேச்சுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். அவர் சொன்ன ஒவ்வொரு கருத்துக்கும் நாங்கள் முறையாக பதிலடி அளிப்போம். முதல்வர் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. பிரதமரை மேடையில் அமரவைத்து இப்படி பேசியது தவறு’ என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளர். அதேபோல, ‘தமிழகத்துக்கு பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். விழாவில் தமிழ் கலாசாரம், மொழி பற்றி பெருமையாக பிரதமர் மோடி பேசினார். ஆனால் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு தகாத முறையில் நடந்துள்ளது வெட்கக்கேடானது. முதல்வர் ஸ்டாலின் இதை அரசியல் நிகழ்வு போல கருதி உள்ளார். அவரின் பேச்சில் இடம்பெற்ற கருத்துக்கள் அவரின் தவறை மூடி மறைக்கும் செயல்’ என்று மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.