ராகுலுக்கு கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்துவதாகக் கருதிக்கொண்டு, குஜராத்தை சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவான ‘மோடி’ என்ற குலப்பெயர் கொண்ட மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்திப் பேசினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவரது இந்த செய்கைக்காக, நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில், வழக்கமாக வெளிநாடுகளில் பாரதத்தின் நற்பெயரை இழிவுபடுத்தி வரும் ராகுல் காந்தி, பாரதத்தின் உள் விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு சக்திகளை துணைக்கு அழைத்தார். ராகுல் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், பாரதத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக முதன்முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய விசயங்களை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். அவரது, நாடாளுமன்ற எம்.பி. பதவி முடக்கம் பற்றியும் கவனம் கொண்டுள்ளோம். நாங்கள் அறிந்தவரை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கூடிய நிலையில் தான் ராகுல் காந்தி இருக்கிறார். இந்த தீர்ப்பு நிலையான ஒன்றா? அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா? என்பது பற்றி பின்னர் தெளிவாக தெரிய வரும். இந்த விவகாரத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் இருக்க வேண்டும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் பற்றி நாங்கள் கவனித்து வருகிறோம் என்று அமெரிக்காவும் கூறியிருந்தது. ஜெர்மனியும் இந்த விவகாரத்தில் தலையிட்டதற்கு காங்கிரசின் மூத்த தலைவர் திக் விஜய சிங் நன்றி தெரிவித்துள்ளார். இவற்றை சுட்டிக்காட்டி, தனது டுவிட்டர் பக்கதில் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “வெளிநாட்டு சக்திகளை பாரதத்தின் உள்விவகாரங்களில் தலையிட வரவழைத்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி. நினைவில் கொள்ளுங்கள். வெளிநாட்டு தலையீடுகளால் பாரதத்தின் நீதிமன்ற அமைப்பு மீது செல்வாக்கு செலுத்த முடியாது. வெளிநாட்டு செல்வாக்கை பாரதம் எந்த வகையிலும் சகித்து கொள்ளாது. ஏனெனில் எங்களுடைய பிரதமர் நரேந்திர மோடி” என பதிவிட்டுள்ளார்.