சொந்தக் கட்சியில் இருந்தே கண்டனம்

லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பாரதத்தில் ஜனநாயகம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.வினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில், “ராகுல்காந்தி, மற்றொரு நாட்டின் நாடாளுமன்றத்தில் தனது சொந்த நாட்டை இழிவுபடுத்துகிறார். ராகுல் காந்திக்கு பித்து பிடித்து விட்டது. இல்லையென்றால், யாராவது ஒருவர் மற்றொரு நாட்டில் தனது நாட்டை அவமதிப்பாரா? அல்லது ஒருவேளை அவர் இத்தாலியை தனது நாடாக கருதி இருக்கலாம். இந்த குப்பைகளை பற்றி பாரதத்திலேயே அவர் பேசியிருக்கலாமே? அல்லது மரபணு ரீதியாக அவர் ஐரோப்பாவை விரும்புகிறாரா? மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரச்னைகளை பற்றி கவலைப்படாத அரசு’’ என விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரின் மகன் அனிருத், ராகுலுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது பாரதம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத், அம்மாநிலத்தின் காங்கிரஸ் அதிருப்தி தலைவரான சச்சின் பைலட்டின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.