இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடி குறித்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். அதில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு தனது கருத்தை தெரிவித்தார் இளையராஜா. இதனை விமர்சித்துள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘தபேலா அடிப்பவர் எல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது. உணவுக்கு வழியில்லாமல் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த நேரத்தில் கம்யூனிச சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள், பணமும் புகழும் வந்தவுடன் நாங்கள் உயர்ந்த ஜாதி என்கின்றரே இது என்ன நியாயம்? வயது 80 ஆகிறது. ஆனால், ராஜாவாம், இளையராஜாவாம்’ என பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை, அடையாரை சேர்ந்தவர் மூர்த்தி என்பவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டக்கூடிய வகையில் பேசிய இளங்கோவனை எஸ்.சி எஸ்.டி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.