அசாமில் கடந்த மே 21 அன்று ஒரு சமூக விரோத கும்பல், படத்ராவா காவல் நிலையத்திற்கு தீ வைத்து எரித்தது. இது குறித்து மாநில பா.ஜ.க தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘காவல்துறையினர் விசாரணையில், படத்ராவா காவல் நிலைய தீவைப்பு வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்புக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ வன்முறைகள், கோருக்குட்டி பகுதி வெளியேற்ற வன்முறை முதல் சமீபத்திய படத்ராவா காவல் நிலையத்தின் சமீபத்திய தீவைப்பு வன்முறை சம்பவம் வரை இவை அனைத்திலும் பி.எப்.ஐ அமைப்பின் தொடர்புகள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. பக்சா போன்ற மாவட்டங்களில் பி.எப்.ஐ நடத்தும் வகுப்புவாத பாட்திட்டங்களைப் பரப்பும் விதமான பயிற்சித் திட்டங்கள், அசாமை சீர்குலைக்க அவர்கள் எப்படி வெளிப்படையாக முயற்சிக்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதனால், பி.எப்.ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய சி.எப்.ஐ போன்றவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் அசாம் அரசு உறுதியாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சரை பலமுறை சந்தித்து இந்த அமைப்புகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். ஒரு அமைப்பைத் தடை செய்வதில் நிறைய சட்ட நடைமுறைகள் உள்ளன, ஆனால் அசாம் அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.