ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, 2021

நமது நாட்டில் தயாராகும் எந்த ஒரு திரைப்படமும், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்று தான், வெளி வர முடியும். திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகளை வைத்து அதற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும். வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் இருந்தால், அதற்கு ஏற்றார் போல், சான்றிதழ் வழங்கப்படும்.

தணிக்கைக் குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட 90% திரைப்படங்கள், தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டு சான்றிதழ் பெற்று இருக்கின்றன. தணிக்கைக் குழு அனுமதி மறுக்கும் காட்சிகளுக்காக, தீர்ப்பாயம் சென்று அனுமதி வாங்கிய படங்களும் இருக்கின்றன. அந்த தீர்ப்பாயத்தை அரசு கலைத்தது.

திரைப்படத் தணிக்கை வாரியம்:

“திரைப்படத் தணிக்கை வாரியம்” என்பது, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஓர் அமைப்பு. தணிக்கை வாரியத்தின் தலைமை இடம் மும்பையில் உள்ளது. மாநில அலுவலகங்கள்  கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத், புது தில்லி, கட்டாக், குவகாத்தி நகரத்தில் உள்ளன. தணிக்கை வாரிய உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள்.

ஆராயக் குழு:

நீதிபதி முகுல் முட்கல் தலைமையில், 2013 ஆம் ஆண்டு சினிமாவுக்கு தரப்படும்  தணிக்கை சான்றிதழ் சம்பந்தமாக ஆராய, ஒரு குழு அமைக்கப் பட்டது. 2016 ஆம் ஆண்டு ஷியாம் பெனகல் அவர்கள் தலைமையில் திரைப்பட தணிக்கை சான்றிதழ் குறித்து ஆராய, ஒரு குழு அமைக்கப்பட்டது.

இரண்டு குழுவின் அறிக்கைகளையும் கேட்டறிந்த மத்திய அரசு, சினிமா தொழிலில் ஏற்படும் இணையதள திருட்டை தடுக்க, மத்திய அமைச்சரவை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி ஒரு சட்டம் இயற்ற முடிவு செய்து, மாநிலங்களவையில் (Rajya Sabha) பிப்ரவரி 12 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. பின்னர், அது நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு ஆராயப்பட்டது.

தணிக்கை சான்றிதழின் வகைகள்:

ஒரு திரைப்படத்தை பார்த்ததும், வழக்கமாக நான்கு விதமான தணிக்கை சான்றிதழை, வாரியம் வழங்கும். அவை:

U” – அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் உள்ள படம்.

“A” – 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும், பார்க்கக் கூடிய வகையில் உள்ள படம்.

“S” – பிரத்தியோகமாக, சிலர் மட்டும் பார்க்கக் கூடிய வகையில் உள்ள படம்.

“U/A” –  சில எச்சரிக்கை வார்த்தைகளுடன், 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், பார்க்கக் கூடிய வகையில் உள்ள படம்.

 

சினிமா துறையை ஒழுங்குப் படுத்தும் சட்டமானது 1952 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, தொடர்ந்து நடைமுறையில் இருந்து கொண்டு வருகின்றது. இதில், திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது. “ஒளிபரப்பு திருத்த வரைவு மசோதாவை” மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டது. ஒளிபரப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா ஜூன் 18-ஆம் தேதி வெளியிடப் பட்ட தில் இருந்து, நாடு முழுக்க திரைப்படக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஒளிபரப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா:

  • ஏற்கனவே சினிமாவிற்கு வழங்கப்பட்ட தணிக்கை (சென்சார்) சான்றிதழை, மறு ஆய்வு செய்யக் கூடிய அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகின்றது. தேவைப்பட்டால் அந்த தணிக்கை சான்றிதழை மத்திய அரசாங்கம் ரத்து செய்ய முடியும். இது நாள் வரை, ஒரு திரைப் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை, மத்திய அரசு திரும்பப் பெற முடியாது. ஆனால், தற்போது இந்த சட்டத்தின் மூலம், அந்நிய நாடுகளின் உறவை பாதிக்கும் வகையில் ஏதேனும் காட்சிகள் இருந்தாலோ, நீதி மன்றத்தை விமர்சிக்கும் வகையில் ஏதேனும் காட்சிகள் இருந்தாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் ஏதேனும் காட்சிகள் இருந்தாலோ, இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகையில் ஏதாவது காட்சிகள் இருந்தாலோ, அந்த சினிமாவிற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்யக்கோரி, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க முடியும்.

 

  • படம் எடுத்த இயக்குனரின் எழுத்துப் பூர்வமான அனுமதி இன்றி, எந்த இடத்திலாவது, அந்த இயக்குனர் இயக்கிய படத்தின் ஒரு பகுதியையோ, அல்லது சில காட்சிகளையோ, யாரேனும் ஒளிபரப்பு செய்தால், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், மூன்று லட்சம் வரை அபராதமோ அல்லது சினிமா எடுக்க செலவான மொத்த தயாரிப்புச் செலவில், ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

 

  • ஒரு திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கும் போது, வயது வாரியாக சான்றிதழ் வழங்கும்படி சட்டம் மாற்றப் பட உள்ளது. அதாவது “U/A – 7+, U/A – 13+, U/A – 16+” என வயது வாரி பார்க்கும் வகையில் உள்ளது.

திருட்டு வி.சி.டி.:

ஒரு காலத்தில் பைரசி என அழைக்கப்படும், “திருட்டு வி.சி.டி.” முறையோ அல்லது படம் வெளி வந்தவுடன் சமூக வலைத் தளங்களில் வெளியிடும் வழக்கமோ இருந்தது கிடையாது. கால மாற்றத்திற்கு ஏற்ப, தற்போது திருட்டு வி.சி.டி. இருப்பதால், அதற்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட, திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டு தகவல் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர். குறிப்பாக வெற்றிமாறன், நந்திதா தாஸ், ஷபனா ஆஸ்மி, பா. ரஞ்சித் போன்ற பிரபலங்களும் அடங்கும்.

பலருடைய கருத்தைக் கேட்க மத்திய அரசு கால அவகாசம் கொடுத்து இருந்தது. அதன்படி, இந்த வரைவு சட்ட மசோதாவை பற்றி, ஜூலை 2021 ஆம் ஆண்டு, இரண்டாம் தேதிக்குள் தங்களுடைய கருத்தை அனுப்ப கோரி இருந்தது.

பல நாட்களாக எந்தவிதக் கருத்தையும் கூறாமல், கடைசி நாளன்று கருத்துக்களைக் கூறி, மக்கள் மத்தியில் தேவையில்லாத சர்ச்சையை நடிகர் சூர்யா ஏற்படுத்தி வருவதாக, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும், தொடர்ந்து குறை கூறி வரும் திரைப் பிரபலங்களான கமலஹாசன்,  கார்த்திக் சுப்புராஜ் போன்ற பலரும் இந்த சட்டத்தை எதிர்த்து வரும் அதே வேளையில், இந்த சட்டத்தை ஆதரித்து பல திரைப்பட பிரபலங்கள், தங்களின் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகா உயர்நீதிமன்றம், 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று, வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் இயற்றப்பட்ட மசோதா இவை என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், திரைப் பிரபலங்கள் கருத்துக்களைக் கூறி வருவது, மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது.

தணிக்கை சான்றிதழ் பெற்று வெளிவந்த “துப்பாக்கி, விஸ்வரூபம்” போன்ற திரைப்படங்களை வெளியிட விடாமல் தடுத்த போது, வாய் மூடி மௌனியாக இருந்த கருத்து சுதந்திரப் போராளிகள், தற்போது கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக சிலர் எடுக்க முயன்ற போது, அதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சிலர் போராட்டம் செய்து, அவர்கள் அதில் வெற்றியும் பெற்று, படம் எடுக்கப்படாமல் நிறுத்தப்பட்டதே, அப்போது எங்கே போனார்கள், கருத்து சுதந்திரப் போராளிகள், தமிழ் திரைப்பட ஆர்வலர்கள்.

கொரோனாவால் தமிழக மக்கள் கடுமையான துயரத்தை அனுபவித்துக் கொண்டு வரும் இவ்வேளையில், மக்களின் மனதை திசை திருப்பவே இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு, திரைப் பிரபலங்கள் நாடகமாடுகிறார்கள் எனவும், இது நாள் வரை அமைதியாக இருந்த கருத்து சுதந்திரப் போராளிகள், தற்போது அதைப் பற்றி பேசி, மக்களின் கவனத்தை திசை திருப்பவே இது போன்ற அரசியல் செய்கிறார்கள் எனவும், மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகின்றது. அது உண்மையோ  என திரைப் பிரபலங்களின் பேச்சுக்கள், தற்போது நமக்கு உணர்த்துகின்றது.

தேச நலனுக்கு எதிராக திரைப்படம் எடுப்பவர்கள் தான், பயப்பட வேண்டுமே தவிர, தேச நலன் சார்ந்து திரைப்படம் எடுப்பவர்கள், இந்த சட்டத்தை  வரவேற்றுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்…

 

  • .ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai