விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டை வாரங்கலில் உள்ள காகதீய வம்சத்தால் கட்டப்பட்ட ஹிந்து கோயில்களுக்குள் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்த நிகழ்வை கண்டித்துள்ளனர். இதனை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்ட அவர்கள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இது ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் செயல் என்று கூறினர். பின்னர், மில்ஸ் காலனி காவல் நிலையத்திற்குச் சென்று காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீகாந்த் ராவ், ஏ.சி.பி ரமல சுனிதா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வி.ஹெச்.பி அமைப்பினர், குண்டு செருவு அருகே உள்ள ராமாலயம் மற்றும் சுயம்பு ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயிலுக்குள்ளேயே கிறிஸ்தவர்கள் வெகுஜன பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்து உள்ளூர் ஹிந்துக்கள் கவலையடைந்துள்ளனர். ராமாலயத்தின் உள்ளே ராமரின் ‘பாத முத்திரைகள்’ மற்றும் சங்கு சக்கரங்கள் உள்ளன. மேலும் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகாசிவராத்திரி திருவிழா ஒரு பிரபலமான நிகழ்வாகும். கிறிஸ்தவ சமூகம் எப்படி கோயிலில் கிறிஸ்தவ கூட்டு பிரார்த்தனை நடத்தலாம்? அங்கு அசைவ உணவை எவ்வாறு அவர்கள் உண்ணலாம்? என கேள்வி எழுப்பினர். இதுபோன்ற சம்பவங்கள் மதக் கலவரங்களுக்கு வழிவகுக்கும், அப்பகுதியில் நிலவும் அமைதியான சூழலைக் கெடுக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், வி.ஹெச்.பி மற்றும் பிற ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தும்” என எச்சரித்தனர்.