கடந்த ஜூலை 2019ல், வின்னிபெக்கில் உள்ள கனடாவின் தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் வேலை செய்துவந்த சீன வைரலாஜிஸ்டுகள் சிலர், அங்கிருந்து திருடப்பட்ட எபோலா, நிபா வைரஸ்களை சீனாவிற்கு அனுப்பியது கண்டறியப்பட்டதால் வெளியேற்றப்பட்டனர். அந்த விவகாரத்தில் பெரிய திருப்பமாக, வெளியேற்றப்பட்ட விஞ்ஞானிகளுடன் சீனாவின் உயர்மட்ட ராணுவ விஞ்ஞானியான மேஜர் ஜெனரல் சென், தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் எபோலா நோய் குறித்த இரண்டு ஆய்வுகளில் பங்கெடுத்தார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
மேஜர் ஜெனரல் சென், சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழு உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு சீனாவின் உயர் மட்ட தலைமைக்கான மதிப்புமிக்க ஆலோசனை அமைப்பாக செயல்படுகிறது. சீனாவின் ஒற்றை டோஸ் கோவிட் 19 தடுப்பூசி ஆராய்ச்சி பங்களிப்புக்காக செப்டம்பர் 2020ல் நடந்த விழாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் மேஜர் ஜெனரல் சென் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இச்சம்பவம் குறித்து கூறுகையில், ‘நேட்டோ நட்பு நாடுகளை பல்வேறு வழிகளில் உளவு பார்க்கும் சில நாடுகளின் முயற்சிகள் அதிகரித்திருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது’ என தெரிவித்தார்.