டெக் நிறுவனங்களை கைப்பற்றும் சீனா

சீன அரசு, டிஜிட்டல், தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் தனியார் நிறுவனங்கள் அனைத்தையும் அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, அந்த நிறுவனங்களிடம் இருக்கும் உலக மக்களின் தகவல்கள் அனைத்தும் கைப்பற்றுவது என்ற மிகப்பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தின் முதல் படியாகச் சில நாட்களுக்கு முன்பு சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான DIDI நிறுவனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடித்தது. அடுத்ததாக, அலிபாபா குழுமத்தின் நிதியியல் சேவை பிரிவின் அலிபே நிறுவனத்தில் கை வைத்துள்ளது சீன அரசு. அலிபே பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் தளம் சீனா, பாரதம் உட்படப் பல ஆசிய நாடுகளில் இயங்கி வருகிறது. அலிபே தளத்தில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தரவுகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா இருமுறை கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அலிபே நிறுவனத்தின் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு வெளியீட்டு திட்டத்தை தடை செய்தது சீன அரசு என்பது நினைவுகூரத்தக்கது.