ஹாங்காங் கழுத்தை நெறிக்கும் சீனா

சீனாவால் கடந்த 2020 ஜூனில் ஹாங்காங் மீது திணிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெரும்பாலான ஹாங்காங்வாசிகள், சீனாவின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ், தங்களது எதிர்காலம் குறித்து சந்தேகம் அடைந்துள்ளனர்.

எதிர்காலம் குறித்த கவலை:

தைப்பே டைம்ஸ் கருத்துக் கணிப்பின்படி, இந்த கடுமையான சட்டத்தின் கீழ் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மக்கள் சுதந்திரம்:

ஹாங்காங்கை சீனாவுக்கு ஒப்படைத்ததன் 24வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு அறிக்கையை அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ‘ஃபிரீடம் ஹௌஸ்’ வெளியிட்டது. அதில், உலகில் மக்கள் சுதந்திரம் குறித்த மதிப்பீட்டில், ஹாங்காங்கிற்கு மிக மோசமான மதிப்பீடாக 52 புள்ளிகள் கொடுக்கப்பட்டிருந்தது.

தொடர் கைது:

ஹாங்காங் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஹாங்காங்கில் உள்ள சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலர் கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஊடக சுதந்திரம்:

சீன அரசிற்கு சாதகமான ஊடகங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட ஊடகங்களாக அறிவிக்கப்படுகின்றன. அவற்றின் தொழிலாளர்களை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஊடக பிரதிநிதிகளாக மறுவரையறை செய்யப்படுகின்றனர். ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் உரிமையாளர் மற்றும் அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல செய்தி நிறுவனங்கள் அமைதியாக்கப்பட்டுள்ளன. ஸ்டாண்ட் நியூஸ், வினான்ட்மேக் மீடியா மற்றும் போஸ்ட் 852 போன்ற ஆன்லைன் வெளியீடுகளில் சீனா குறித்த முந்தைய பதிவுகள் அகற்றப்படுகின்றன.

கல்வி சுதந்திரம்:

சீனாவை விமர்சிக்கும் கல்வியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரியில் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கல்வி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகளை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் அரசியல் கருத்துக்களைப் பற்றி விவாதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்புச் சட்டம் குறித்த கல்வியை 8,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வியாளர்கள், மாணவர்கள் பறிமாற்ற திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்வது அல்லது நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

கலையில் கைவைத்த சீனா:

ஹாங்காங் திரைப்பட தணிக்கைத்துறை, தேச பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் திரைப்படங்கள் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்த தணிக்கை இணையம், கலை, கலாச்சாரம் உட்பட அனைத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தியான்மென் நிகழ்ச்சி ரத்து:

தியான்மென் சதுக்க படுகொலையை நினைவுபடுத்தும் விதமாக கடந்த 30 வருடங்களாக அனுசரிக்கப்பட்ட மெழுகுவர்த்தி ஏற்றுதல், பொதுக் கூட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

 புதிய குடியேற்ற விதிமுறைகள்:

கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட ஹங்காங் குடியேற்ற விதிமுறை மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும்போது, தனிநபர்கள் ஹாங்காங்கிற்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடைசெய்யும் அதிகாரத்தை சீனா முழுமையாக பெறும். இதனால், இயக்க சுதந்திரம் கூட பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

தேச துரோகம்:

சீனாவிலிருந்து விலகுதல், சீன அரசின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடுதல், வெளி நாட்டு சக்திகளுடன் கூட்டு சேருதல் என சீன அரசு கருதும் அனைத்தும் பிரிவினை முயற்சியாகக் கருதப்படும். அதற்கு கடுமையான சிறைவாசம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.

 

மதிமுகன்