ஒத்துழைக்க மறுக்கும் சீனா

சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்திடமிருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அது குறித்து ஆராய்ச்சி செய்ய தனது ஆய்வகத்தில் யாரையும் அனுமதிக்க முடியாது என சீனா மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இதுபோன்ற வைரஸ் தோற்றத்தைக் கண்டுபிடிக்கும் திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை” என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கடந்தமுறை சென்றபோதுகூட, தான் கண்டறிந்ததாக ஒரு அறிக்கையை சீனா அக்குழுவுக்கு அளித்ததே தவிர அவர்களை ஆய்வகத்தில் அனுமதிக்கவில்லை. முன்னதாக சமீபத்தில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில், வைரஸின் தோற்றத்தைக் கண்டறிய சர்வதேச விசாரணைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகள் கோரின. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது புலனாய்வு குழுவிடம் வைரஸின் தோற்றம் குறித்து விசாரித்து ஆகஸ்ட் மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.