பயங்கரவாதத்தின் மீதான இடதுசாரிகளின் பாசாங்குத்தனத்தின் மற்றொரு உதாரணமாக, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூப் அசாரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பயங்கரவாதியாக பட்டியலிட்டதை சீனா தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளது. இதன் மூலம், பாரதத்தின் மீதான வெறுப்பை சீனா மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் 1,267 தடைகள் கமிட்டியில் அப்துல் ரவூப் அசாரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக பட்டியலிட, அமெரிக்காவின் அனுசரணையுடன் பாரதத்தால் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டது. இதனை சீனா நிறுத்தி வைத்துள்ளது. இப்போது, பாரதம் மீண்டும் ஒரு புதிய முன்மொழிவை பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் வைப்பது மட்டுமே அதற்குள்ள ஒரே வழி. முன்னதாக, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதக் குழுவின் துணைத் தலைவரும், அதன் நிறுவனர் மசூத் அசாரின் இளைய சகோதரருமான அப்துல் ரவூப் அசார், 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தியது, பாரத நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், 2001, மற்றும் 2016ல் பாரத விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் உட்பட பல பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக அறியப்பட்டவர். பாரதத்தால் மிகவும் தேடப்படும் நபர்களில் இவரும் ஒருவர். பாரதமும் அமெரிக்காவும் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கவும், உலகளாவிய பயணத் தடை மற்றும் அவரது சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் விரும்பின. பயங்கரவாதிகளின் தயகமான பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஐ.நாவின் தடை பட்டியலில் இருந்து பாதுகாப்பது சீனாவின் வழக்கம். இப்படி, சீனா பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஐ.நாவில் பாதுகாத்த சம்பவம் குறைந்தது 4 முறை நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆண்டு, பாரதத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவை ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் பட்டியலிடுவதற்கு சீனா தடையாக இருப்பதாக விமர்சித்தார். பாதுகாப்பு கவுன்சில் ஒரு தெளிவான மற்றும் வலிமையான செய்தியை உலகுக்கு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் பொறுப்பைத் தவிர்க்கவோ அல்லது தண்டனையிலிருந்து விடுபடுவதை செயல்படுத்தவோ அரசியல் பரிசீலனைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார். சீனாவைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடாமல், இதுபோன்ற அரசியல் காரணங்களால் உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதிகள் மீதான தடைகளுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி வழங்கத் தவறிவிட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.