சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம்

ராமநாதபுரம்  மாவட்டம் தொண்டி பகுதியைச்  சேர்ந்தவர் தஸ்தகீர்-  அஜிசா தம்பதியினர்.   இவர்களது ஒன்றரை வயதான குழந்தை முகமது மையூர் தலையில் வீக்கம், ரத்த கசிவு அதிகமாக இருந்ததால் இரு நாள்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதித்துள்ளனர். அங்கு, குழந்தையின் வலது கையில் ரத்தக்குழாய் வழியாக ஊசியின் மூலம் மருந்து ட்ரிப்ஸ் போட்டுள்ளனர். ட்ரிப்ஸ் போட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் குழந்தையின் கை கருநீளமாக மாறியதுடன் செயலிழந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள் செவிலியர்களிடம் கூறிய போது குழந்தையின் கையை நன்றாக தேய்க்கும் படி கூறியுள்ளதாகவும், மருத்துவர் ஒருவர், ஆயில்மெண்ட்  எழுதிக் கொடுத்தார். அது மருத்துவமனையில் இல்லை என்பதால் வெளியே இருந்து வாங்கி வந்து பயன்படுத்தியும் பயன் இல்லை.  இந்த நிலையில் குழந்தையின் வலது கையை அகற்ற வேண்டும் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்றும் அழகிய நிலையில் குழந்தையின் கை இருப்பதாக எழும்பூர் மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். இதையடுத்து சனிக்கிழமை இரவு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செவிலியர்களின் தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை அகற்றப்பட்டதா, சம்மந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  இதற்கு, அந்த குழந்தை குறைப்பிரசவச்சில் பிறந்திருக்கிறது. குழந்தை பிறக்கும்போதே பல்வேறு பிரச்னைகளுடன் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சைகளும் மருத்துவமனைகளில் அளித்திருக்கிறார்கள்.

குழந்தைக்கு ஊசி போடும்போது அலட்சியமாக செயல்பட்டனரா என்பது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட அலுவலர்களை நியமித்துள்ளோம். இன்னும் 3 நாள்களில் விசாரணை முடிவு வந்துவிடும். எந்த மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியரும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பணிக்கு வருவதில்லை. மருத்துவமனைக்கு வருபவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பணிக்கு வருகின்றனர். பணியின்போது ஏதாவது கவனக்குறைவு ஏற்பட்டிருந்தால், அதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.