கடந்த ஆகஸ்ட் 24 அன்று, ஹைதராபாத்தில் பா.ஜ.கவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ டி. ராஜா சிங்கிற்கு எதிராக தெலுங்கானாவில் நடந்த போராட்டங்களின் போது சில குழந்தைகள் ‘சர்தான் சே ஜூடா’ (தலையை வெட்டுவோம்) என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வைரலான இந்த வீடியோ குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) பார்வைக்கு வந்தது. இதையடுத்து, ஹைதராபாத் காவல்துறை ஆணையருக்கு என்.சி.பி.சி.ஆர் கடிதம் எழுதியுள்ளது. அதில், எம்.எல்.ஏ ஒருவரின் தலையை வெட்ட வேண்டும் என குழந்தைகள் கோஷமிடும் வீடியோ ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடாக உள்ளது. குழந்தைகள் போராட்டங்களில் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இது சிறார் நீதி, விதிமுறைகளை மீறுவதாகும். எனவே, இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யவும், வீடியோவில் காணப்படும் குழந்தைகளை குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இதில் ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.