குழந்தை திருமணம் செய்தவர்கள் கைது

பாரதத்தில் உள்ள தற்போதைய சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18. ஆணின் திருமண வயது 21. எனினும் நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் மா நிலங்களில் ஒன்றாக அசாம் உள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில் 11.7 சதவீதம் பேர் கருவுறுகின்றனர். அசாமின் பல மாவட்டங்களில் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்வது சாதாரணமான நிகழ்வாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி முதல் அசாம் மாநில அரசு குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்கியுள்ளது. இதற்கான பிரச்சாரத்தையும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், குழந்தை திருமணம் தொடர்பாக பார்பேட்டா மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால் இதுவரை குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக நான்காயிரத்துக்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாமில் அதிக குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் ஒன்றான நாகோன் மாவட்டத்திற்குச் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அடுத்த ஒரு வாரத்தில் மாநிலம் முழுவதும் குழந்தைத் திருமணங்கள் செய்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைதாக உள்ளனர். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். அசாமின் நாகோன் மாவட்டத்தில் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. குழந்தைத் திருமணங்களால் மிக இளம் வயதிலேயே பெண்கள் கருத்தரிக்கின்றனர். அதனால் பிரசவத்தில் தாய், சேய் மரணங்கள் அதிகரிக்கின்றன. இதனை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என தெரிவித்தார்.இதனிடையே நேற்றுவரை மட்டும் இவ்வழக்கில் சுமார் 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.