உத்தர பிரதேசத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்திய நாத்தின் உத்தரவின் பேரில், கொரோனா பணிகளை கவனிக்க பிரத்தியயேகமாக ‘குழு-9’ என்ற குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா நிவாரணப்பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் நிக்ரானி சமிதி கிராம அமைப்பு அமைக்கப்பட்டு அங்கு சுத்தம் சுகாதாரம் பேணப்படுகிறது. பல புதிய கொரோனா மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள், தடுப்பூசி செலுத்துதல், வீடு வீடாகச் சென்று கண்காணித்தல் என பல கட்டங்களில் வேலைகள் திட்டமிட்ட அடிப்படையில் நடைப்பெற்று வருவதால் தற்போது அங்கு தொற்று மிகவும் குறைந்துள்ளது. கொரோனா சோதனையில் தொற்றாளர்களின் சதவீதம் 3.9 என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால், உத்தர பிரதேச அரசை உலக சுகாதார அமைப்பும் சமீபத்தில் பாராட்டியிருந்தது. இந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டா பிலிம் சிட்டியில் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோது, ‘கோவிட் -19 இன் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடுவதற்கு அரசு இப்போதே தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது’ என்று கூறினார். அதன்படி, உ.பியில் அவசரநிலையை சமாளிக்க அதன் முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக என்று 2,200 தனி ஆம்புலன்ஸ்களை முன்னுரிமை அடிப்படையில் அனுமதித்திருக்கிறார். மேலும், 3வது அலையை சமாளிக்கும் விதத்தில் அதிகமாக தடுப்பூசி செலுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.