சென்னை ராஜஸ்தான் இளைஞர்கள் சேவை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்களின் அறிவுரைப்படி, வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு, ஆரோக்கியமான உணவு அவசியம். தொற்று பாதிப்புக்கு ஆளான பலருக்கும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை. வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாத சூழ்நிலையில், ஓட்டல்களில் இருந்து வரும் உணவில் பலருக்கும் திருப்தி கிடைப்பதில்லை. பணம் இருந்தாலும் நல்ல உணவுக்கு பலர் ஏங்குகின்றனர். இவர்களுக்கு உதவும் விதமாக, ராஜஸ்தான் இளைஞர் அமைப்பின், ‘மெட்ரோ ஸ்டார்’ பிரிவினர், சென்னையில் சுமார் 1,300 பேருக்கு தினமும் சத்தான, சுவையான, நட்சத்திர ஒட்டலின் தரத்துடனும், ருசியுடனும் மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர்.

இந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் தினமும் 10 பேருக்கு இலவமாக வழங்க ஆரம்பித்த இந்த சேவை தற்போது வளர்ந்து பத்துக்கும் மேற்பட்ட சமையலறைகளில், 200க்கும் அதிகமான இளைஞர்கள் சேவை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. உணவு தேவைப்படும் நோயாளிகள், மருத்துவ சான்றிதழுடன், அவர்களிடம் விண்ணப்பித்தால், வேண்டுகோளை பரிசீலித்து, உண்மைத் தன்மையை அறிந்த பின், அவர்களுக்கு தொடர்ந்து, மூன்று நாட்கள், மூன்று வேளை, மிக மிக சுத்தமான, சுகாதாரமான, சத்தான உணவை அவர்களே ஆட்கள் வைத்து, வீட்டு வாசலில் சேர்க்கின்றனர். இந்த இளைஞர்களின் சேவைக்கு அவர்களது குடும்பத்தினர் மனமுவந்து பண உதவி செய்து வருவதால் ஒரளவு நிதி ஆதாரத்துடன் இந்த தொண்டு தொய்வின்றி நடைபெற்று வருகிறது. யாரிடமும் இவர்கள் நிதி கேட்பதில்லை. ஆனாலும், பெரிய மனது படைத்த சிலர்  இவர்களுக்கு உதவி வருகின்றனர். இதனை குறித்து மேலும் தகவலும் உணவும் தேவைப்படுவோர் 98413 98413 என்ற எண்ணை அணுகலாம்.