மலிவு விலை முகக்கவசம்

கொரோனா பெருந் தொற்றிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பதில் முகக்கவசங்களின் பங்கு மிக முக்கியமானது. மத்திய தொழில்நுட்பத் துறை புதியதாக ‘எஸ்.எச்.ஜி 95’  முகக்கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (பி.ஐ.ஆர்.ஏ.சி), ஐ.கே.பி நாலேட்ஜ் பார்க் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ‘எஸ்.எச்.ஜி 95’ என்கிற வீரியம் மிக்க பல அடுக்கு முகக் கவசத்தை ஐதராபாத்தில் உள்ள பரிசோதா டெக்னாலஜிஸ் என்கிற தனியார் மருத்துவ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளன. இவை மறு உபயோகத்துக்குப் பயன்படாத ‘என்-95’ முகக்கவசங்களுக்கு மாற்றாக அமையும். விலையும் மலிவு. பருத்தித் துணியால் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்கள் பல அடுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். மீண்டும் பயன்படுத்தவும் முடியும். இந்த முகக்கவசங்களுக்கு ரூ.50 முதல் 75 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் இந்த வகை முகக்கவசங்கள் 90 சதவீதம் மாசு துகள்களிலிருந்தும், 99 சதவீத வைரஸ் கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கும். அதேசமயம், எளிதாக காற்றை சுவாசிக்கும் வகையிலும் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டு உள்ளது.