ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களில் வழங்கப்படும் அன்னதான திட்டத்திற்கு நிதி கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனோ இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருப்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கும், பல ஆதரவற்றவர்களுக்கு இதன் மூலம் உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அன்னதான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, மக்கள் நன்கொடை அளிக்கும்படி அறநிலையத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு அன்னதானம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஹிந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஹிந்து கோவில்களின் வருமானத்திலிருந்து கொடுக்க நினைப்பது ஆட்சேபனைக்குரியது. ஹிந்து கோயில்களின் வருமானத்தை கோயில்களின் வளர்ச்சிப் பணிகளைத் தவிர அரசின் நலத்திட்டங்கள் போன்று வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் பலமுறை பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். மேலும், அறநிலையத்துறை சார்பில் உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் படமும், அமைச்சர் சேகர்பாபுவின் படமும் மட்டுமே அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்படுகிறது.
எந்த கோயில் சார்பாக வழங்கப்பட்டதோ அந்த கோயிலின் படம் பேனரில் பிரதானமாக இடம் பெறுவதுதானே முறை? ஸ்டாலினும் அமைச்சரும் அவர்களது சொந்தக் காசில் வழங்குவது போல தோற்றத்தைத்தானே இது ஏற்படுத்துகிறது? ஹிந்து ஆலயங்களின் வருமானத்தை எடுத்து அரசின் திட்டங்களுக்காக செலவிடும் தமிழக அரசு, அதேபோல பிற மத வழிபாட்டுத் தலங்களின் வருமானத்தை எடுத்து செலவிட முடியுமா? என்கின்ற கேள்விகளும் இன்று பொதுமக்களிடையே எழுந்துள்ளது.