சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொதுமக்களின் பணம் ரூ. 500 கோடிக்கு மேல் சுரண்டப்படுகிறது என கூறி சென்னை, அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சிலிண்டர் சப்ளை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து புகார் அளிக்க வசதி உள்ளது. புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார். சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.