ராஜஸ்தான் காங்கிரசில் குழப்பம்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில துணை முதல்வராக இருந்தச் சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள், 19 பேருடன், கட்சித் தலைமைக்கு எதிராக, சச்சின் பைலட் கடந்த ஆண்டு போர்க்கொடி துாக்கினார். இதனை சரிசெய்ய, அகமது படேல் தலைமையில் மூன்று நபர் கமிட்டியை சோனியா அமைத்தார். அவர்களுடன் நடைபெற்ற பேச்ச்வார்த்தையில், சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவை, வாரிய பதவிகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு ஆகியும், உறுதி அளித்த பதவிகள் வழங்கப்படாதது, சச்சின் பைலட் ஆதரவாளர்களை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பைலட்டை கைகழுவ அவரது ஆதரவாளர்களை முதல்வர் அசோக் கெலாட் தரப்பு வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், சமரசக் குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் ‘காலியாக உள்ள அமைச்சர் பதவிகள், வாரியம், கமிஷன் பதவிகள் விரைவில் நிரப்பப்படும். இது குறித்து பேசி வருகிறோம். சச்சின் பைலட் உடன் தொடர்பில் இருந்து வருகிறேன்’ என அவசர அவசரமாக செய்தி வெளியிட்டுள்ளார். ஆனால், இது குறித்து சச்சின் பைலட் கருத்துக் கூற மறுத்துவிட்டார்.