மஹாராஷ்டிராவில் குழப்பம்

மஹாராஷ்டிராவில் நடைபெறும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சராக இருப்பவர் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே. அக்கட்சியின் மூத்த தலைவரான இவர் 4 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவரை சமீப காலமாக கட்சி மேலிடம் புறக்கணித்து வந்தது. மேலும் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கவில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருந்தார். தற்போது அவரது தலைமையில் 10  சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இதேபோல மகாராஷ்டிராவில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்களை சமாளித்து சமாதானம் செய்து கூட்டணி ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ்  தலைமை கமல்நாத்தை மேலிடப் பார்வையாளராக நியமித்துள்ளது. கமல்நாத் மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்தபோது கடந்த 2020 மார்ச்சில், 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் இருந்து பா.ஜ.கவுக்கு தாவியதால் ஆட்சியை பறிகொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனா கூட்டணியை சேர்ந்த 33 எம்.எல்.ஏக்கள் ஆதரவு ஏக்நாத் ஷிண்டேவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டால் ஆட்சி கவிழும் ஆபத்தும் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதனையடுத்து கட்சியின் குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா நீக்கியுள்ளது.