கோவா காங்கிரசில் குழப்பம்

மகாராஷ்டிரா அரசியல் களத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஒரு புயல் அடித்து ஓய்ந்த நிலையில், அதன் அண்டை மாநிலமான கோவாவிலும் ஒரு புதிய புயல் உருவாகியுள்ளது. கோவாவில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. சுமார் 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன் காங்கிரஸ் அங்கு எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராகமைக்கேல் லோபோ உள்ளார். இந்நிலையில், மைக்கேல் லோபா தலைமையில் 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக இரு நாள்களாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்கெல் லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக், ராஜேஷ் பல்தேசாய், தேலியாலா ஆகிய ஐந்து எம்.எல்.ஏக்களும் கட்சி தொடர்பில் இல்லை என அம்மாநில காங்கிரஸ் தெரிவித்தது. கோவா காங்கிரஸ் பொறுப்பாளரான தினேஷ் குண்டு ராவ், மைக்கெல் லோபோ, திகம்பர் காமத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியை உடைத்து பா.ஜ.கவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மைக்கெல் லோபோவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது. மேலும், மைக்கெல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோரின் எம்.எல்.ஏ பதவிகளை கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய கோவா காங்கிரஸ் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. அதேவேளை, மைக்கெல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தாங்கள் கட்சியில் தான் இருக்கிறோம், எந்த குழப்பத்தையும் செய்யவில்லை என விளக்கமளித்துள்ளனர்.