மத்திய அரசு, வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் குறைந்த விலைக்கு வழங்கும் கோதுமையை வாங்கி, மாவாக அரைத்து தமிழக அரசு விற்குமா என்ற எதிர்பார்ப்பு, ரேஷன் கார்டுதாரர்களிடம் எழுந்துஉள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு இலவசமாக கோதுமை வழங்கப்படுகிறது.
அதன்படி, அரிசி ஒதுக்கீட்டில் அரிசிக்கு பதில், சென்னையில், 10 கிலோவும், மற்ற மாவட்டங்களில், 5 கிலோவும் கோதுமை வழங்கப்பட்டது. இதற்காக மாதம், 14,000 டன் கோதுமையை மத்திய அரசு இலவசமாக வழங்கியது.
இந்தாண்டு ஏப்ரலில் இருந்து, முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு மட்டும் மாதம், 8,500 டன் கோதுமை இலவசமாக வழங்குகிறது. அதற்கு ஏற்ப ஒருவருக்கு, 3 கிலோ வரை கோதுமை வழங்கப்படுகிறது. அதுவும், முதலில் செல்வோருக்கு மட்டுமே கிடைக்கிறது. எனவே, மாதம், 15,000 டன் கோதுமை வழங்கும்படி, தமிழகம் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால், வெளிச்சந்தையில் தேசிய கூட்டுறவு முகமை வாயிலாக கோதுமை வாங்கப்படுகிறது.
மத்திய அரசு, கோதுமை விலை உயர்வை தடுக்க, வெளிச்சந்தை திட்டத்தின் கீழ், தனியார் சிறிய மாவு அரவை ஆலைகளுக்கு கிலோ, 21.25 ரூபாய் விலையில் வாரத்திற்கு அதிகபட்சம், 100 டன் வரை வழங்குகிறது. தற்போது, வெளிச்சந்தையில் கோதுமை மாவு கிலோ, 50 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கூட்டுறவு துறையின் கீழ், 40 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் செயல்படுகின்றன.
காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டகசாலை உள்ளிட்ட சில பண்டகசாலைகள், மாவு ஆலைகளை நிறுவியுள்ளன. அதில், கோதுமை, கேழ்வரகு போன்றவற்றின் மாவு வகைகள் விற்கப்படுகின்றன. அதனால், மத்திய அரசு, வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் குறைந்த விலைக்கு வழங்கும் கோதுமையை வாங்கி, மாவாக அரைத்து தமிழக அரசு விற்குமா என்ற எதிர்பார்ப்பு, ரேஷன் கார்டுதாரர்களிடம் எழுந்துஉள்ளது.