குடியரசுத் தலைவருக்கு பிரபலங்கள் கடிதம்

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள், பல துறைகளைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள், தூதர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 146 பேர், கடந்த திங்கட்கிழமை அன்று பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஆகியோருக்கு மேற்கு வங்கத்தில் வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்.ஐ.டி) உடனடியாக அமைத்து விசாரிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘மேற்கு வங்கம் ஒரு முக்கியமான எல்லை மாநிலமாக இருப்பதால், தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஒருமைப்பாடு மீதான தேச விரோதத் தாக்குதலைச் சமாளிக்க இந்த வழக்குகளை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க வேண்டும்.’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், ‘திருணமுல் கட்சியின் குண்டர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறையில் 25 க்கும் மேற்பட்ட பா.ஜ.க உறுப்பினர்கள், ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் உயிர் இழந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் 23 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் 15,000 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.சுமார் 5,000 பேர் தங்கள் உயிரைக் காப்பாற்ற மற்ற மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஆளுநர் ஜகதீப் தங்கரை வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு செல்வதைத் தடுக்க மம்தா பானர்ஜி எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனாலும், ஆளுனர் மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு விஜயம் செய்தது மட்டுமல்லாமல், அசாமில் உள்ள முகாமையும் பார்வையிட்டார்.’ போன்ற விவரங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட 146 பேரில் 17 ஓய்வு பெற்ற நீதிபதிகள், 32 ஐ.பி.எஸ் அதிகாரிகள், 31 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 10 தூதர்கள் மற்றும் 56 ராணுவ வீரர்கள் அடங்குவர். முன்னாள் தூதர் பாஸ்வதி முகர்ஜி மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் டி.ஜி.பி பிரவீன் தீட்சித் ஆகியோர் கையெழுத்திட்டவர்களின் பட்டியலுடன் இந்த கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தனர். இதே கருத்தை வலியுறுத்தி சுமார் 2,093 பெண் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் துணை நீதிபதிகளுக்கு மற்றொரு கடிதம் எழுதியுள்ளனர்.