மமதாவின் அண்ணன் மகனுக்கு சி.பி.ஐ சம்மன்

மேற்குவங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், அவரது மூத்த அண்ணன் அமித் பானர்ஜியின் மகன் அபிஷேக் பானர்ஜி மமதாவின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார். தற்போது அவர் திருணமூல் காங்கிரஸின் பொதுச் செயலாளராக உள்ளார். மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் அபிஷேக் பானர்ஜிக்கு தொடர்பிருப்பதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் குற்றச்சட்டு முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஊழல் வழக்கில் தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தலாம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அபிஷேக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இவர் மீது ஏற்கனவே நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கு, தனது முறைகேடான வருமானத்தை லண்டன் மற்றும் தாய்லாந்தில் உள்ள தனது மனைவி மற்றும் மைத்துனி பெயரில் உள்ள கணக்குகளுக்கு மாற்றிய வழக்கு, வங்கதேசத்துக்கு மாடுகள் கடத்திய ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.