சி.பி.ஐ விசாரிக்கும் ஆக்ஸ்பாம் இந்தியா முறைகேடுகள்

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ, அரசு சாரா தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாம் இந்தியா மற்றும் அதன் அலுவலக பணியாளர்கள் மீது வெளிநாட்டு நிதி விதிமுறைகளை மீறியதற்காக வழக்குத் தொடர்ந்துள்ளதுடன் அதன் அலுவலகங்களில் சோதனையும் நடத்தியது. 2013 மற்றும் 2016க்கு இடையில், ஆக்ஸ்பாம் இந்தியா தனது வெளிநாட்டு பங்களிப்பு பயன்பாட்டுக் கணக்கிற்காக அரசுக்கு தெரிவித்த வங்கிக் கணக்கில் பணம் பெறுவதற்குப் பதிலாக சுமார் ரூ. 1.5 கோடியை நேரடியாகப் பெற்றதாக உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 2020ம் நிதியாண்டில் கொள்கை ஆராய்ச்சி மையத்திற்கு ரூ. 12.71 லட்சத்தை செலுத்தியதன் மூலம் ஆக்ஸ்பாம் இந்தியா, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (எப்.சி.ஆர்.ஏ) விதிகளை மீறியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்த புகார்கலின் பேரில் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியாவின் எப்.சி.ஆர்.ஏ உரிமம் கடந்த ஜனவரி 2022ல் உள்துறை அமைச்சகத்தால் இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சி.பி.ஐயின் கூற்றுப்படி, ‘மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வருமான வரி ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட மின்னஞ்சல் தகவல்தொடர்பு, வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் எப்.சி.ஆர்.ஏ புதுப்பித்தலுக்கு ஆக்ஸ்பாம் இந்தியா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு, பலதரப்பு வெளிநாட்டு அமைப்புகள் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு அந்த தொண்டு நிறுவனத்துக்கு செல்வாக்கு உள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியா மற்ற சங்கங்கள் அல்லது லாபம் ஈட்டும் ஆலோசனை நிறுவனங்களுக்கு பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம் எப்.சி.ஆர்.ஏ விதிமுறைகளைத் தவிர்க்க திட்டமிட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சி.பி.ஐ, ஆக்ஸ்பாம் இந்தியா அலுவலகத்தில் நடத்திய ஒரு சோதனை நடவடிக்கையின் போது சில சந்தேகத்துகுரிய மின்னஞ்சல்களை கைப்பற்றியது. உலகளாவிய ஆக்ஸ்பாம் கூட்டமைப்பின் ஒரு அங்கமான ஆக்ஸ்பாம் இந்தியா, வறுமை, சமத்துவமின்மை, பாலின நீதி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதாக கூறிக்கொள்கிறது. இந்த விவகாரத்தில் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ள அந்த அமைப்பு, அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாகவும் தங்களுடைய எப்.சி.ஆர்.ஏ பதிவை புதுப்பிக்காத அரசின் முடிவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் எங்கள் மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.