டெல்லியின் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில், அரசின் மதுபானக் கொள்கைகளில் மாற்றம் செய்து, புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய கொள்கையின் அடிப்படையில் சுமார் 800 தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. “இந்தப் புதிய கொள்கையின் மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும். தனியாருக்குக் கொள்ளை லாபம் கிடைக்கும். ஆம் ஆத்மி அரசு இதில் ஊழல் செய்திருக்கிறது” என பா.ஜ.கவினர் குற்றம்சாட்டினர். 2022 ஜூலை 8ம் தேதி அன்று, டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், புதிய மதுபானக் கொள்கைகளில் முறைகேடு நடந்திருப்பதாகத் துணை நிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், ‘தனியார் நிறுவனங்களுக்குச் சலுகைகளுடன் லைசென்ஸ் வழங்குவதற்காக மணீஷ் சிசோடியா பணம் பெற்றிருக்கிறார். அந்தப் பணத்தை ஆம் ஆத்மி பஞ்சாப் தேர்தலில் செலவழித்திருக்கிறது’ என்று குற்றம்சாட்டியிருந்தர். துணைநிலை ஆளுநர் சக்சேனா, இந்தக் கொள்கையை அமல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து உடனடியாக பின்வாங்கிய மணீஷ் சிசோடியா, ஜூலை 28, 2022 அன்று, புதிய மதுபானக் கொள்கையைத் திரும்பப் பெற்று பழைய கொள்கையே தொடரும் என அறிவித்தார். இந்நிலையில், சி.பி.ஐ இது தொடர்பாக மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியது. இந்த விவகாரத்தில், 2 மதுபான நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிந்தது சி.பி.ஐ. மணீஷ் சிசோடியா வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டன. இதில் சம்பந்தப்பட்ட பலரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணையின் அடிப்படையில், இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஆம் ஆத்மி மூத்த தலைவர், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் உள்பட 30க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில்தான், மணீஷ் சிசோடியாவை அதிரடியாக சி.பி.ஐ கைது செய்துள்ளது. முன்னதாக, மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் அவரிடம் விசாரணை நீடித்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை. அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியது சி.பி.ஐ. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை 5 நாள் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.