தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க பேரம் பேசிய விவகாரம் தொடர்பான வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், ‘தெலங்கானாவில் சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிமேல் வழக்கின் தன்மையை பொறுத்தே சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என தெரிவித்தார். டெல்லி சிறப்பு காவல்துறை சட்டத்தின் கீழ் சி.பி.ஐ அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒரு மாநிலத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த அந்த மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.